vanamseivom@gmail.com
044 4380 4084
Blog
IPCC Report
சமூக பிரச்சனைகள்

ஐபிசிசியின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை

  • ஒரு புறம் கலிபோர்னியாவிலும் கிரீசிலும் காட்டுத்தீ பரவிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் மேற்கு செர்மனியில், சூலை மாதம் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்க, காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரசாங்கக் குழுவின் (ஐபிசிசி) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை கடந்த திங்கள் (09/08/2021) அன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரசாங்கக் குழுவின் ஆறாவது முக்கிய மதிப்பீட்டின் ஒரு பகுதியாகும். காலநிலை அறிவியலின் சமீபத்திய முன்னேற்றங்கள், செயல்முறை புரிதல்கள், உலகளாவிய மற்றும் பிராந்திய காலநிலை உருவகப்படுத்துதல்கள் ஆகியவற்றிலிருந்து பல ஆதாரங்களை இணைத்து, காலநிலை அமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய மிக சமீபத்திய புரிதலை இந்த அறிக்கை தருகிறது.

    கடலோர நகரங்கள், வேளாண் நிலங்கள், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற சமுதாய அம்சங்களை காலநிலை மாற்றம் எவ்வாறு பாதிக்கும் என்பதை விவரிக்கும், இதன் இரண்டாவது பகுதி, 2022இல் வெளியிடப்படும். அதே ஆண்டு வெளியாகும் மூன்றாவது பகுதி, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும், புவி வெப்பமடைதலை தடுப்பதற்குமான வழிகளை ஆராயும்.

    14,000க்கும் மேற்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், உலகின் முன்னணி காலநிலை விஞ்ஞானிகளால் எழுதப்பட்டு, 195 தேசிய அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த அறிக்கையிலிருந்து நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது இது தான்: தொழில்துறை புரட்சி முதலான மனித செயல்பாடுகளின் ஒட்டுமொத்த தாக்கம் காலநிலைக்கு விரைவான மற்றும் குறிப்பிடத்தக்க பேரழிவு மாற்றங்களை \"சந்தேகத்திற்கு இடமின்றி\" ஏற்படுத்தியுள்ளது.


    கொள்கை வகுப்பாளர்களுக்கான சுருக்கம் (Summary for Policymakers) - சில முக்கிய புள்ளிகள்:

     

    1. தற்போதைய காலநிலை - The Current State of the Climate

     

    • வளிமண்டலம், கடல் மற்றும் நிலத்தை மனித செயல்பாடுகள் வெப்பமாக்கி உள்ளது என்பது சந்தேகங்களுக்கு இடமின்றி தெளிவாகிறது. 
    • காலநிலை அமைப்பின் தற்போதைய நிலை மற்றும் சமீபத்திய மாற்றங்கள் ஆகியவை இதுவரை பல நூற்றாண்டுகளாக முன்பேதும் கண்டிராத மோசமான நிலையை எட்டியுள்ளன.  
    • மனித செயல்பாட்டால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், உலகின் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் ஏற்கனவே பல வானிலை மற்றும் காலநிலை உச்சநிலைகளை ஏற்படுத்த துவங்கிவிட்டது.  
    • வெப்ப அலைகள், கடும் மழை, வறட்சி, வெப்பமண்டல சூறாவளிகள், போன்ற காலநிலை உச்சநிலைகளின் அதிகரிப்பு, குறிப்பாக, மனித செயல்பாடுகள் தான் அவற்றுக்கு பின்னணி என்பதற்கான ஆதாரங்கள் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைக்கு (2014) பின் மிகவும் பலம் அடைந்துள்ளன.

    •                                       

      உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்


      2. எதிர்கால காலநிலை – The Future of Climate Change

       

      • பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு எவ்வளவு கட்டுப்படுத்தப் பட்டாலும், குறைந்தபட்சம் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும்.   
      • இனி வரும் தசாப்தங்களில் கரியமில வாயு மற்றும் பிற பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை அதிகளவு குறைக்காவிட்டால், புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி மற்றும் 2 டிகிரி செல்சியஸ் அளவை கட்டாயம் தாண்டும். 
      • தொடர்ச்சியாக புவி வெப்பமடைதல், உலகளாவிய நீர் சுழற்சி மாறுபாடுகள், உலகளாவிய பருவமழை மற்றும் வறட்சி நிகழ்வுகளை அதிகளவு தீவிரப்படுத்தும் என்று கணிக்கப்பகிறது.
      • கரியமில வாயுவின் உமிழ்வு தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலையில், வளிமண்டலத்தில் கரியமில வாயு குவிவதைக் குறைப்பதில் கடல் மற்றும் நிலத்தின் கார்பன் உறிஞ்சும் செயல்திறன் குறையும் என்று கணிக்கப்பகிறது. 

      கடந்த மற்றும் எதிர்கால கரியமில வாயு உமிழ்வுகளால் ஏற்படும் பல மாற்றங்கள் குறிப்பாக பனிக்கட்டிகள், கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல நூற்றாண்டுகள் வரை மாற்றி அமைக்க/ மீள முடியாதவை.  



      வளிமண்டலத்தில் கரியமில வாயு குவிவதைக் குறைப்பதில் கடல் மற்றும் நிலத்தின் கார்பன் உறிஞ்சும் செயல்திறன் குறையும்.


      3. எதிர்கால காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் - Limiting Climate Change in the Future

       

      • மனித செயல்பாட்டால் தூண்டப்பட்ட புவி வெப்பமடைதலை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்த, கரியமில வாயு உமிழ்வை குறைக்க வேண்டும், குறைந்தபட்சம் நிகர பூச்சிய கரியமில உமிழ்வு net zero CO2 emission நிலையை அடைய வேண்டும். மேலும், மற்ற பசுமை இல்ல வாயு உமிழ்வுக்ளை அதிகளவு குறைக்க வேண்டும்.
      • வலுவான, விரைவான மீத்தேன் உமிழ்வு குறைப்பும் வெப்பமயமாதல் விளைவையும், காற்று மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்.

        

      ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் அறிக்கை குறிப்பிடும் சில முக்கிய புள்ளிகள்

       

      • 2011 - 2020 தசாப்த காலத்தில் உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை 1850-1900 காலத்துடன் ஒப்பிடுகையில் 1.09 டிகிரி அதிகமாக இருந்துள்ளது. 
      • 1850 முதல் தற்போது வரையான காலத்தில் கடந்த ஐந்து வருடங்களில் தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. 
      • 1901 - 1971 உடன் ஒப்பிடுகையில் சமீபத்திய கடல் மட்ட உயர்வு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.  
      • 1990களில் இருந்து உலகளவில் பனிப்பாறைகள் உருகியதற்கும், ஆர்க்டிக் கடல் பனி குறைந்ததற்கும் மனித செயல்பாடுகள் தான் சுமார் 90 சதவிகிதம் வரை காரணமாக இருந்துள்ளன.
      • வெப்ப அலைகள் போன்ற வெப்ப உச்சநிலை நிகழ்வுகள் 1950க்கு பிறகு மிகவும் தீவிரமடைந்து வருகின்றன என்பது உறுதியாகிறது. 



      1900 உடன் ஒப்பிடுகையில் கடல் மட்டத்தின் சராசரி உயர்வு



      எதிர்கால பாதிப்புகள் - அறிக்கை குறிப்பிடும் சில முக்கிய புள்ளிகள்

       

      • எவ்வாறான உமிழ்வு சூழ்நிலைகளிலும், வெப்பநிலை 1850-1900 காலத்தை விட 1.5 டிகிரி அதிகமான அளவை 2040க்குள் கட்டாயம் எட்டிவிடும்.  
      • 2050க்கு முன்னர் ஆர்க்டிக் ஒரு முறையாவது பனி இல்லா நிலையை அடையும்  
      • 1.5 டிகிரி வெப்பமயமாதலில் கூட \"வரலாற்று பதிவில் கண்டிராத\" அளவு தீவிர நிகழ்வுகள் அதிகப்படியாக நிகழும்.  
      • சமீபத்திய காலங்களில் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்த தீவிர கடல் மட்ட உயர்வு நிகழ்வுகள் 2100இல் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் என்று கணிக்கப்படுகிறது

       

      எதிர்வரும் ஆபத்துகள் 

      உமிழ்வுகள் எப்படி கையாளப்பட்டாலும் அடுத்த இரண்டு தசாப்தங்களில் நாம் நிச்சயமாக 1.5 டிகிரி வெப்பநிலை உயர்வை எட்டுவோம் என்று ஐபிசிசி குறிப்பிடுகிறது. உமிழ்வுகளை மெதுவான விகிதத்தில் குறைத்தாலே 2 டிகிரி வெப்பநிலை உயர்வை எட்ட நேரிடும். அடுத்த இரண்டு தசாப்தங்களில் உமிழ்வுகள் வீழ்ச்சியடையவில்லை என்றால் 3 டிகிரி அளவு வரை வெப்பநிலை உயரும் என தெரிகிறது - அது கட்டாயம் ஒரு பேரழிவை உருவாக்கும்.




      சராசரி உலக வெப்பநிலையில் கணிக்கப்படும் உயர்வு அளவுகள்


      பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை, இந்த நூற்றாண்டில் உலக வெப்பநிலை உயர்வை 2 டிகிரிக்குக் கீழே வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அதை 1.5 டிகிரிக்குக் கீழ் வைத்திருப்பதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளும் 2015இல் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் குறிக்கோள்களில் கையெழுத்திட்டன. ஆனால் இந்த ஐபிசிசி அறிக்கை, எப்படிப்பட்ட உமிழ்வு சூழ்நிலைகளின் கீழும், கார்பன் வெளியீட்டை மிகப்பெரும் அளவில் குறைக்காவிட்டால் இந்த இரண்டு இலக்குகளையும் எட்ட முடியாது என்று கூறுகிறது.

       

      உலகெங்கிலும் கிட்டத்தட்ட 1 பில்லியன் மக்கள் அடிக்கடி உயிருக்கு ஆபத்தான வெப்ப அலைகளை சந்திக்கக் கூடும், கடுமையான வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தண்ணீருக்காக போராடும் நிலை உருவாகும். இன்று உயிருடன் இருக்கும் சில விலங்கு  மற்றும் தாவர இனங்கள் காணாமல் போகும்.  உலகின் பெரும் பகுதிகளில் மீன்வளத்தைத் தக்கவைுக்கும் பவளப் பாறைகள், அதிக அளவில் பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

       

      அறிக்கை குறிப்பிடும் பிராந்திய மாற்றங்கள் – ஆசியா

       

      • ஆசியாவில் குளிரின் தீவிரம் குறைந்து, வெப்பத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது. வரும் தசாப்தங்களில் இதே போக்கு தான் தொடரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.
      • கடல் வெப்ப அலைகள் தொடர்ந்து அதிகரிக்கும். குறிப்பாக வட ஆசியப் பகுதிகளில் தீ வானிலை காலங்கள் நீண்டு தீவிரமடையும்.  
      • ஆசியாவின் பெரும்பகுதிகளில் சராசரி மழைபொழிவு அளவும், தீவிர மழைப்பொழிவுகளும் அதிகரிக்கும்.  
      • தற்போது சராசரி மேற்பரப்பு காற்றின் வேகம் குறைந்துள்ளது. ஆசியாவின்  மத்திய மற்றும்  வடக்குப் பகுதிகளில் இது தொடர்ந்து குறையும்.  

      ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டம் உலக சராசரியை விட வேகமாக அதிகரித்துள்ளது. கடலோரப் பகுதி இழப்பு மற்றும் கடற்கரை பின்வாங்குதலும் அதிகரித்துள்ளது. பிராந்திய சராசரி கடல் மட்டங்கள் தொடர்ந்து உயரும்.  

         


      பிராந்திய வாரியான சராசரி வெப்பநிலை மாற்றங்கள்


      தெற்கு ஆசியா - இந்திய ஒன்றியப் பகுதிகள்

       

      • வெப்ப அலைகள் மற்றும் வெப்ப அழுத்தங்கள் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் தீவிரமாகவும் அடிக்கடியும் ஏற்படும். 
      • ஆண்டு மற்றும் பருவ மழை அளவுகள் 21ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து அதிகரிக்கும்